செய்திகள்

இந்திய டெஸ்டில் வெற்றி பெற வார்த்தைப் போரிலும் ஈடுபட தயார்: ஸ்மித் சொல்கிறார்

Published On 2017-02-14 10:53 GMT   |   Update On 2017-02-14 10:53 GMT
இந்தியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றி பெற தேவைப்பட்டால் வார்த்தைப் போரிலும் ஈடுபடத் தயார் என்று ஸ்மித் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே எந்த வகை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றாலும் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஆட்டத்தை தாண்டி வார்த்தை போர்களிலும் ஈடுபடுவார்கள்.

2008-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது வார்த்தை போர் உச்சக்கட்டத்தை எட்டியது. ஹர்பஜன் சிங் - சைமண்ட்ஸ் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இறுதியில் ஹர்பஜன் சிங் குரங்கு என்று திட்டியதாக பெரிய குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் 2015-ம் ஆண்டு இந்தியா, ஆஸ்திரேலியா சென்றிருக்கும்போது விராட் கோலியை நோக்கி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர்.

தற்போது ஆஸ்திரேலியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி 23-ந்தேதி தொடங்குகிறது.

இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணி பெரிய அளவில் சாதித்தது கிடையாது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நிலையில் துபாயில் பயிற்சி எடுத்துக் கொண்டு இந்தியா வந்துள்ளது.

இந்திய தொடரில் வெற்றி பெற ஸ்லெட்ஜிங் தேவைப்பட்டால் அதையும் செய்வோம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள ஒவ்வொருவரும் அவர்களுடைய இயல்பான பாணியில் விளையாடுவார்கள். இந்திய அணிக்கெதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, வார்த்தை போர்களில் ஈடுபட விரும்பினால், அதை நோக்கிச் செல்வார்கள். அடுத்த 6 வாரங்களில் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது குறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். இந்திய மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய சவாலானது’’ என்றார்.

Similar News