செய்திகள்

டெஸ்ட் போட்டி: இந்தியா - இங்கிலாந்து அணி வீரர்கள் சென்னை வருகை

Published On 2016-12-14 08:01 IST   |   Update On 2016-12-14 08:02:00 IST
சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வீரர்கள் நேற்று மாலை சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள்.
சென்னை :

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இதற்கிடையே, வார்தா புயல் சென்னையை கடுமையாக தாக்கியது. புயலின் கோர தாண்டவத்தில் சேப்பாக்கம் ஸ்டேடியமும் தப்பிக்கவில்லை. அங்குள்ள உயர் கோபுரத்தில் உள்ள மின் பல்புகள் பல காற்றில் பறந்து சிதறின. ரசிகர்கள் அமரும் இருக்கைகள் ஆங்காங்கே இடம் மாறின. ஸ்டேடியத்தை சுற்றி இருந்த மரங்களும் தரையோடு சாய்ந்து இருக்கிறது. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் காசி விஸ்வநாதன் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘புயல் காரணமாக ஆடுகளமோ (பிட்ச்), அவுட்பீல்டோ பாதிக்கப்படவில்லை. ஆனால் ஸ்டேடியத்தில் உள்ள மெகா திரை, குளிர்சாதன வசதிகள் சேதம் அடைந்து இருக்கின்றன. உயர் மின்கோபுரத்தில் உள்ள பல்புகள் காற்றில் பறந்துள்ளன. ஸ்டேடியத்திற்கு சுற்றுப்புறத்தில் உள்ள ரோடுகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் சரிந்து இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் அடுத்த 2 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டியது எங்கள் முன் இருக்கும் சவாலாகும்.

போட்டிக்குள் எல்லாவற்றையும் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேற்கொண்டு புயல்-மழை பாதிப்பு எதுவும் இல்லை என்றால் திட்டமிட்டநேரத்தில் இந்த டெஸ்ட் தொடங்கும். விதிமுறை சர்ச்சைக்கு உள்ளாகிய 3 கேலரிகளும் இந்த டெஸ்டுக்கு பயன்படுத்தப்படமாட்டாது.’ என்று தெரிவித்தார்.

கடைசி டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வீரர்கள் நேற்று மாலை சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள். வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பயிற்சி ஆடுகளம் தயாராக இல்லாததால் இன்றைய வலை பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை இரு அணி வீரர்களும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

போட்டிக்கு முந்தைய நாளான நாளையும் பயிற்சி நடப்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆடுகளம் தார்ப்பாயால் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

Similar News