செய்திகள்

தான் படித்த அரசு பள்ளிக்கு பரிசுத்தொகையில் 30 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய மாரியப்பன்

Published On 2016-09-12 12:50 GMT   |   Update On 2016-09-12 12:51 GMT
பாராலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்த மாரியப்பன் தான் படித்த பள்ளிக்கு பரிசுத் தொகையில் 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பிரேசி்ல் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ‘ரியோ ஒலிம்பிக்’ தொடர் நடைபெற்று முடிந்த பின்னர் தற்போது பாராலிம்பிக் நடைபெற்ற வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும். அவருடன் களமிறங்கிய சக போட்டியாளர் வருண் சிங் பாட்டி தாண்டிய உயரம் 1.86 மீட்டர் ஆகும். இவர் வெண்கலம் வென்றார். அமெரிக்காவை சேர்ந்த சாம் க்ரிவ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். 21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார்.



தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 75 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்க இருக்கிறது. அத்துடன் தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளது.

மேலும், அவருக்கு பரிசுத் தொகை குவிந்த வண்ணம் உள்ளன. பரிசுத்தொகை குவிந்த போதிலும் அவர், தான் படித்த பள்ளிக் கூடத்தை மறக்கவில்லை. தான் படித்த அரசு பள்ளிக்கூடத்திற்கு 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

பாராலிம்பிக் தொடர் நிறைவு விழாவில் மாரியப்பன் இந்திய கொடியை ஏந்திச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News