இந்தியா

குடும்ப தகராறில் கடத்தி செல்லப்பட்ட பச்சிளங்குழந்தையை மீட்டு தாய்ப்பால் கொடுத்து பாதுகாத்த பெண் போலீஸ்

Published On 2022-10-31 11:54 IST   |   Update On 2022-10-31 11:54:00 IST
  • பச்சிளங்குழந்தையை கடத்தி சென்ற ஆஷிகாவின் கணவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர்.
  • அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீசின் மனிதாபிமான செயலை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆசிகா.

இவர் கடந்த 22-ந் தேதி சேவயூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனக்கும் கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த கணவர் தனது பச்சிளங்குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக போலீசார், ஆஷிகாவின் கணவர் ஆதில் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இதில் ஆதில், தனது குழந்தையை கோழிக்கோட்டில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை பிடிக்க ரோந்து போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி ஆதிலை சுல்தான்பத்தேரி என்ற இடத்தில் வைத்து போலீசார் ஆதிலை மடக்கி பிடித்தனர்.

ஆதிலிடம் இருந்து பச்சிளங்குழந்தையும் மீட்கப்பட்டது. அந்த குழந்தை பிறந்து 2 வாரங்களே ஆகியிருந்ததால் அதன் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த குழந்தை தாய்ப்பாலுக்கு ஏங்கி அழுதது. அந்த குழந்தையை மீட்க சென்ற குழுவில் பெண் போலீஸ் ரம்யா என்பவரும் இருந்தார். அவருக்கும் குழந்தை உள்ளது. எனவே அவர் மீட்கப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்தார். அவர் தாய்ப்பால் கொடுத்ததும் அந்த குழந்தை அழுகையை நிறுத்தியது.

பின்னர் அந்த குழந்தை அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீசின் மனிதாபிமான செயலை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News