மதுபாரில் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட 2 வாலிபர்கள் கைது
- மதுபான பாரில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
- துப்பாக்கி சூடு நடந்த மதுபார் உடனடியாக மூடப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியில் ஏராளமான தனியார் மதுபார்கள் உள்ளன. இந்த பார்களில் நேற்று மாலை ஏராளமானோர் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களும் மதுபோதையில் இருந்தனர்.
திடீரென அவர்கள் கைகளில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டனர். மேலும் மதுபான பாரின் கேஷியரை நோக்கியும் சுட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டதும் மதுபாரில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். துப்பாக்கியால் சுட்டதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதற்கிடையே இச்சம்பவம் பற்றி கொச்சி மரடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் மதுபான பாரில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது எழுபுன்னாவை சேர்ந்த ராஜன் மற்றும் அவரது நண்பர் ஹெரால்டு என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் துப்பாக்கி சூடு நடந்த மதுபார் உடனடியாக மூடப்பட்டது. அங்கு சிதறி கிடந்த துப்பாக்கி குண்டுகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.
மேலும் வாலிபர்கள் பயன்படுத்திய துப்பாக்கி என்ன ரகத்தை சேர்ந்தது? எதற்காக அவர்கள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார்கள் என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
இதற்கிடையே மதுபாரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவ காட்சிகளை சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.