தெலுங்கானாவில் விளையாட்டு அரங்கம் கட்டுமான பணியில் 3 தொழிலாளர்கள் பலி
- படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- 3 தொழிலாளர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், சுரங்கலை சேர்ந்தவர் சீனிவாஸ். இவருக்கு அதே பகுதியில் தனியார் உள் விளையாட்டு அரங்கம், மாநாட்டு மைதானம் உள்ளது.
அதன் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.
இந்த பணியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை தூண்கள் இல்லாமல் அலுமினிய சட்டத்தலான உயரமான மேற்கூரை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர் இடிந்து வெல்டிங் மற்றும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த 3 தொழிலாளர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இறந்தவர்களில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பப்லு (வயது 35), பீகாரை சேர்ந்த சுனில் (36) என தெரியவந்தது. மற்றவர்கள் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.