எனக்கு ஓட்டு போடவில்லை என்றால் 2 நாள் சாப்பிடாதீங்க... குழந்தைகளுக்கு வினோத உத்தரவு போட்ட எம்.எல்.ஏ.
- சந்தோஷ் பங்கருக்கு வாக்களியுங்கள். அப்போதுதான் நாங்கள் சாப்பிடுவோம் என்று பதில் சொல்லுங்கள்.
- யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களிடம் நான் சொல்வதை மீண்டும், மீண்டும் சொல்ல வேண்டும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியை சேர்ந்த களம்நுரி எம்.எல்.ஏ. சந்தோஷ் பாங்கர், ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளி கூட விழா ஒன்றில் கலந்து கொண்டார். அபோது பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-
அடுத்த தேர்தலில் உங்கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் 2 நாட்களுக்கு மாணவர்கள் சாப்பிட வேண்டாம். பெற்றோர்கள் கேள்வி கேட்டால், "சந்தோஷ் பங்கருக்கு வாக்களியுங்கள். அப்போதுதான் நாங்கள் சாப்பிடுவோம் என்று பதில் சொல்லுங்கள்.
அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களிடம் நான் சொல்வதை மீண்டும், மீண்டும் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
10 வயது நிரம்பாத பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியில் எம்.எல்.ஏ. பாங்கர் இவ்வாறு பேசிய கருத்துக்கள் தொடர்பான வீடியோ மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு ஒருவாரம் கூட ஆகாத நிலையில் பள்ளி மாணவர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. பாங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில அரசியல்கட்சி வட்டாரத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.
எம்.எல்.ஏ. பாங்கர் இதுபோல் பல கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடதக்கது ஆகும்.