இந்தியா

குஜராத் கலவர ஆவணப்படத்துக்கு தடை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

Update: 2023-02-03 08:06 GMT
  • பி.பி.சி. ஆவணப்படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
  • 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயிலுக்கு தீ வைத்ததில் கரசேவகர்கள் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு பிறகு குஜராத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள்.

இதற்கிடையே குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி தொடர்பாக பிரபல சர்வதேச ஊடகமான பி.பி.சி. ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இரண்டு பாகங்களாக வெளியான ஆவணப்படத்தில் சர்ச்சைக்குரிய மற்றும் உண்மைக்கு மாறான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. ஆவணப்படத்தின் லிங்க்குகளை கொண்ட டுவிட்களும், பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டன. யூடியூபில் இருந்தும் ஆவணப்படம் நீக்கப்பட்டது.

ஆவணப்படம் மீதான மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, மூத்த பத்திரிகையாளர் என்.ராம், வக்கீல் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது.

அப்போது பி.பி.சி. ஆவணப்படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். அதில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பின்னர் வழக்கு விசாரணை ஏப்ரலுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News