இந்தியா

உள்ளாட்சி அமைப்பு நியமனத்தில் முறைகேடு: மேற்கு வங்காள மந்திரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை

Published On 2023-10-08 07:42 GMT   |   Update On 2023-10-08 07:42 GMT
  • மம்தா பானர்ஜியின் மந்திரி சபையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கிறார் பிர்ஹாத் ஹக்கீம்.
  • கடந்த ஒரு வாரத்தில் மேற்கு வங்காளத்தில் 2 மந்திரிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு உணவுத்துறை மந்திரி ரத்தின் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது.

இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் மற்றொரு மந்திரியின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள்.

அவரது பெயர் பிர்ஹாத் ஹக்கீம். அவர் மம்தா பானர்ஜியின் மந்திரி சபையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கிறார். மேலும் கொல்கத்தா மேயராகவும் உள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளில் ஆட்கள் சேர்ப்பு முறைகள் தொடர்பாக மந்திரி பிர்ஹாத் ஹக்கீம் வீட்டில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவரது வீடு தெற்கு கொல்கத்தாவில் உள்ள செட்லா பகுதியில் உள்ளது. மத்திய படைகளின் பாதுகாப்புடன் அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். 2 சி.பி.ஐ. அதிகாரிகள் மந்திரியிடம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் மேற்கு வங்காளத்தில் 2 மந்திரிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News