இந்தியா

தனியார் பஸ் கவிழ்ந்து கிடந்த காட்சி.

ஒடிசாவில் இருந்து ஆந்திராவுக்கு வந்த பஸ் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி

Published On 2022-06-13 06:58 GMT   |   Update On 2022-06-13 06:58 GMT
  • பஸ்சில் ஒடிசாவை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் விஜயவாடாவில் வேலை செய்வதற்காக வந்து கொண்டு இருந்தனர்.
  • சிந்தூர் மண்டலம், எடுகுரல்லபள்ளி தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்தது.

திருப்பதி:

ஒடிசா மாநிலம் பவானி புறத்திலிருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு 60 பயணிகளுடன் தனியார் பஸ் நேற்று மாலை புறப்பட்டது. இந்த பஸ்சில் ஒடிசாவை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் விஜயவாடாவில் வேலை செய்வதற்காக வந்து கொண்டு இருந்தனர்.

பஸ் இன்று காலை 6 மணிக்கு சிந்தூர் மண்டலம், எடுகுரல்லபள்ளி தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதையில் வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்து குறித்து பத்ராச்சலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கிய 35 பேரை மீட்டு சிகிச்சைக்காக பத்ராச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இடிபாடுகளில் சிக்கி தனேஷ்வர் (வயது 25) சுனை ஹரிஜன் (30) அவரது மகன் அர்ஜுன் (5) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயமடைந்த 30 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News