இந்தியா

உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், கோவா 4 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை

Published On 2023-04-25 10:06 GMT   |   Update On 2023-04-25 10:06 GMT
  • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
  • அடிக்கடி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் திடீரென சோதனை நடத்தி வருகிறார்கள்.

புதுடெல்லி:

இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தடை செய்யப்பட்டது. அந்த அமைப்பின் துணை நிறுவனங்களும் தடை செய்யப்பட்டன.

என்றாலும் தடையை மீறி அந்த அமைப்பின் நிர்வாகிகள் ரகசியமாக செயல்பட்டு வருவதாக மத்திய உளவுத் துறைக்கு தகவல்கள் தெரிய வந்தன.

உளவுத்துறையினர் கொடுத்த உஷார் தகவலின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அடிக்கடி நாடுமுழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் இதுவரை நாடு முழுவதும் 108 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பு 285 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது. 5 குற்றப்பத்திரிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த குற்றப் பத்திரிக்கைகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதன்பேரில் அடிக்கடி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் திடீரென சோதனை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், கோவா ஆகிய 4 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட னர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது.

பீகார் மாநிலத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. உத்தரபிரதேசத்தில் 2 இடங்கள், பஞ்சாப், கோவாவில் தலா ஒரு இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

மொத்தம் 17 இடங்களில் சோதனை நடப்பது தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News