இந்தியா

கோபிகா

கேரளாவில் முதல்முறையாக விமான பணிப்பெண் வேலையில் சேர்ந்த பழங்குடியின பெண்- சமூக வலைதளத்தில் குவியும் பாராட்டு

Published On 2022-09-02 09:01 GMT   |   Update On 2022-09-02 09:01 GMT
  • பழங்குடியின பெண்களும் கல்வியில் முன்னேறவும், வேலைவாய்ப்புகள் பெறவும் கேரள அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
  • கேரளாவில் பழங்குடியின பெண் ஒருவர் விமான பணிப்பெண் வேலையில் சேருவது இதுவே முதல் முறையாகும்.

திருவனந்தபுரம்:

கேரளாவை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவருக்கு விமான பணிப்பெண் வேலை கிடைத்துள்ளது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளித்தாலும் இன்னும் அவர்கள் அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்வதில்லை.

இதனை மாற்றி பழங்குடியின பெண்களும் கல்வியில் முன்னேறவும், வேலைவாய்ப்புகள் பெறவும் கேரள அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

அரசின் திட்டங்கள் பழங்குடியின பெண்களை சென்றடைய அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கண்ணூர் பகுதியை சேர்ந்த கோபிகா என்ற பழங்குடியின பெண் விமான பணிப்பெண் பயிற்சியில் சேர்ந்தார்.

இதற்கு தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால் இவர் அரசின் உதவி தொகையை பெற்று இப்பயிற்சியில் சேர்ந்தார்.

பயிற்சி நிறைவு பெற்று அவர் விரைவில் விமான பணிப்பெண் வேலையில் சேர உள்ளார். அடுத்த மாதம் அவர் பணிக்கு செல்ல உள்ளார். கேரளாவில் பழங்குடியின பெண் ஒருவர் விமான பணிப்பெண் வேலையில் சேருவது இதுவே முதல் முறையாகும்.

இது பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் கோபிகா விமான பணிப்பெண் உடையுடன் இருக்கும் புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளன.

இதனை பார்த்த பலரும் பழங்குடியின பெண் கோபிகாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News