இந்தியா

பச்சிளங்குழந்தையை மீட்டு தாய்ப்பால் கொடுத்து பராமரித்த பெண் போலீசுக்கு கேரள ஐகோர்ட்டு பாராட்டு

Published On 2022-11-02 10:18 IST   |   Update On 2022-11-02 10:18:00 IST
  • குழந்தையை மீட்க சென்ற குழுவில் இருந்த பெண் போலீஸ் ரம்யா, அதிகாரிகள் அனுமதியுடன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார்.
  • அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உயிரை காப்பாற்றிய பெண் போலீஸ் ரம்யாவுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது.

இதுபற்றி அந்த பெண் போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவரே குழந்தையை கடத்தி சென்றதாக கூறினார். உடனே போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கினர். இதில் அந்த குழந்தையை பெண்ணின் கணவர் ரெயிலில் பெங்களூருவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

இதை அறிந்த தனிப்படை போலீசார் விரைந்து சென்று வழியிலேயே பெண்ணின் கணவரை மடக்கி பிடித்து குழந்தையை மீட்டனர்.

மீட்கப்பட்ட குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு அழுதுகொண்டே இருந்தது. அந்த குழந்தை தாய்ப்பாலுக்கு ஏங்குவதை அறிந்த போலீசார் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றனர்.

அப்போது குழந்தையை மீட்க சென்ற குழுவில் இருந்த பெண் போலீஸ் ரம்யா, அதிகாரிகள் அனுமதியுடன் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உயிரை காப்பாற்றிய பெண் போலீஸ் ரம்யாவுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதற்கிடையே பெண் போலீஸ் ரம்யாவை கேரள ஐகோர்ட்டும் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது. ஐகோர்ட்டு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி.க்கு எழுதியுள்ள கடிதத்தில், பெண் போலீஸ் ரம்யா கடமை உணர்வும், தாயுள்ளமும் கொண்டவர். அவரை பாராட்டுவதில் பெருமைப்படுகிறேன்.

மனித நேயத்துடன் நடந்துகொண்ட அவரை எத்தனை முறை பாராட்டினாலும் தகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐகோர்ட்டின் பாராட்டு சான்றிதழ் குறித்து பெண் போலீஸ் ரம்யா கூறும்போது, சமீபத்தில் தான் மகப்பேறு விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்தேன். அழுத குழந்தையை பார்த்தபோது அதனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்பட்டது.

எனவே தான் வேறு எதை பற்றியும் கவலைப்படாமல் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தேன். இதற்காக எனக்கு கிடைத்த பாராட்டு மகிழ்ச்சியை அளிக்கிறது, என்றார்.

Tags:    

Similar News