இந்தியா

ராகுல் காந்தி அலுவலகத்தை தாக்கிய வழக்கில் 4 காங்கிரசார் கைது

Published On 2022-08-20 04:41 GMT   |   Update On 2022-08-20 09:57 GMT
  • வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகம் தாக்கப்பட்டது.
  • ராகுல் காந்தியின் எம்.பி. அலுவலக ஊழியர்கள் உள்பட 4 காங்கிரசாருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

திருவனந்தபுரம்:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யாக உள்ளார்.

கேரளாவில் வனவிலங்கு சரணாலயம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி இது தொடர்பாக எந்த போராட்டத்திலும் பங்கேற்கவில்லை என்று கூறி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எப்.ஐ. அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகம் தாக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தியின் வயநாடு எம்.பி. அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதில் எஸ்.எப்.ஐ. தொண்டர்கள் அலுவலகத்தை சூறையாடியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது அலுவலகத்தில் இருந்த காந்தி படத்தை அலுவலக ஊழியர்களே சேதப்படுத்தியதாக தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த ராகுல் காந்தியின் எம்.பி. அலுவலக ஊழியர்கள் உள்பட 4 காங்கிரசாருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

போலீசார் பலமுறை சம்மன் அனுப்பியும் காங்கிரசார் 4 பேரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஜிப், நவ்ஷாத், ரதிஷ் மற்றும் ராகுல் காந்தியின் எம்.பி. அலுவலக ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News