உண்மை எது

உண்மை எது: மதச்சாயம் பூசப்பட்டு தவறாக பகிரப்பட்ட உ.பி. வீடியோ

Published On 2023-08-18 14:31 GMT   |   Update On 2023-08-18 14:33 GMT
  • இச்சம்பவம் ஆகஸ்ட் 11 அன்று நடந்துள்ளது
  • ஹைதர் கடைக்கு சென்ற போது மீண்டும் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர்

சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில் உத்தர பிரதேசத்திலுள்ள ஹர்டோய் பகுதியில், ரெயில் தண்டவாளத்திற்கு அருகே ஒரு மனிதரை பல ஆண்கள் சேர்ந்து தாக்கும் காட்சிகள் இருந்தன.

இதனை பகிர்ந்தவர்களில் ஒரு பயனர் பகிரும் போது அவ்வீடியோவுடன், "ரெயில்வே கேட் காவலாளியை ஜிஹாதிகள் தாக்குகிறார்கள். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்." என குறிப்பிட்டு ஒரு குறுஞ்செய்தியும் அத்துடன் இணைத்திருந்தார்.

ஆனால், விசாரணையில் அந்த வீடியோவில் உள்ள சம்பவம், ஆகஸ்ட் 11 அன்று, உத்தர பிரதேச ஹர்டோய் பகுதியில் உள்ள பிஹானி கோட்வாலி வட்டாரத்தில் உள்ள மஹ்முத்புர் சரயா கிராமத்தில் ஒரு விபத்து குறித்து நடந்த வாக்குவாதம், முற்றி கைகலப்பாக மாறிய போது எடுக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

மஹ்முத்புரில் வசிக்கும் சபா ஹைதர் என்பவர் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பர்வீன் என்பவர் மீது மோதி விட்டு, அவரது மோட்டார்சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார். ஆனால், அவர்தான் மோதியது என்பதை அறிந்து கொண்ட பர்வீன் வீட்டை சேர்ந்தவர்கள், சபா வீட்டிற்கு செல்லும் முன்பே அவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இரு குடும்பத்து பெரியவர்களும் தங்களுக்குள் பேசி சமாதானப்படுத்தியதால் பர்வீன் வீட்டை சேர்ந்தவர்கள் திரும்பி சென்றனர். இதையடுத்து ஹைதர் தன் கடைக்கு சென்றார். அப்போது பர்வீன் வீட்டை சேர்ந்தவர்கள் மீண்டும் அவரை சூழ்ந்து கொண்டு ரெயில்வே கிராசிங்கிற்கு அருகே அவரை அடித்தனர். இந்த சம்பவம் வீடியோவாக அப்போதே வெளியிடப்பட்டது.

இச்சம்பவத்தில் ரெயில்வே கேட்மேனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இதில் எந்தவிதத்திலும் மத சம்பந்தமான காரணங்கள் இல்லை என ரெயில்வே உயர் அதிகாரிகளும், காவல்துறையினரும் உறுதி செய்துள்ளனர்.

Tags:    

Similar News