கேரளாவில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.600 ஆக உயர்வு
- முருங்கைக்காயின் விலை ஒரு மாதத்தில் 10 மடங்கு உயர்ந்துள்ளது.
- கனமழை பெய்ததால் காய்கறிகளின் விலையும் கேரளாவில் அதிகமாகியிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநில மக்களின் உணவில் தவிர்க்க முடியாத ஒன்று முருங்கைக்காய். சாம்பார், அவியல் மட்டுமின்றி பல்வேறு வகை உணவு வகைகளில் முருங்கைக்காயை பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் கேரளாவில் முருங்கைக்காயின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு 130 முதல் 150 ரூபாய் வரை இருந்த ஒரு கிலோ முருங்கைக்காய், தற்போது 600 ரூபாயாக அதிகரித்துள்ளது. வரத்து குறைவாக இருப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனின் போது தென்மாநிலங்களில் முருங்கைக்காயின் தேவை அதிகரிக்கும்.
அதன் காரணமாக விலையும் உயருவது வழக்கமானதாகும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூ.500 வரை உயர்ந்தது. ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிகமாகி இருக்கிறது.
கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரப்பள்ளியில் முருங்கைக்காயின் விலை ஒரு மாதத்தில் 10 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.30-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ முருங்கைக்காய், தற்போது ரூ.380-க்கு விற்கப்படுகிறது. நாட்டு வகை முருங்கைக்காய் ரூ.420 வரை விற்பனை செய்யப்படுகிறது.
விலை அதிகமாக இருப்பதால் சிறிய கடைகளில் முருங்கைக்காயை காண முடியவில்லை. பெரிய கடைகளில் கூட சில அளவு கிலோ முருங்கைக்காய்களே இருக்கின்றன. ஆனால் அதனை வாங்குவதற்கும் ஆள் இல்லை. இந்த விலை உயர்வு காரணமாக கேரள மாநிலத்தில் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் முருங்கைக்காய் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை சமைப்பது குறைந்துவிட்டது.
கேரளா மாநிலத்துக்கு பெரும்பாலான காய்கறிகள் தமிழ்நாட்டின் தென்காசி, மேட்டுப்பாளையம், கம்பம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது அந்த இடங்களில் கனமழை பெய்ததால் காய்கறிகளின் விலையும் கேரளாவில் அதிகமாகியிருக்கிறது.