சபரிமலையில் நேர்மையற்றவர்களை விரட்டியடித்து பக்தர்களின் குறைகளை தீர்ப்போம்: தேவஸ்தான புதிய தலைவர்
- எனக்கு விடுக்கப்பட்டுள்ளது ஒரு தெய்வீக அழைப்பு.
- பக்தர்களுக்கு சுமூகமான யாத்திரையை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் மீது பலரும் குறை கூறி வருகின்றனர். இந்த நிலையில் தேவஸ்தான முன்னாள் அதிகாரி உள்பட சிலரை, தங்கம் மாயம் குறித்து விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேவஸ்தான புதிய தலைவராக மலையாள பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைமை செயலாளரும், முன்னாள் துணைவேந்தருமான ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கூறுகையில், எனக்கு விடுக்கப்பட்டுள்ளது ஒரு தெய்வீக அழைப்பு. அரசின் உத்தரவு கிடைக்கப் பெற்றதும் பொறுப்பேற்பேன். வாரியத்தின் செயல்பாட்டை மேலும் தொழில் முறைமயமாக்குவதற்கு பாடுபடுவேன். ஒவ்வொரு நெருக்கடியையும் ஒரு வாய்ப்பாக நான் பார்க்கிறேன்.
பக்தர்களுக்கு சுமூகமான யாத்திரையை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாங்கள் நேர்மையற்ற மக்களை விரட்டியடித்து பக்தர்களின் குறைகளை தீர்ப்போம். சபரிமலை சீசன் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். சர்ச்சைகள் எங்கள் கவனம் அல்ல. அரசாங்கத்தின் நம்பிக்கையை நான் நிலைநிறுத்துவேன் என்றார்.