இந்தியா

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு- மணீஷ் சிசோடியாவின் உதவியாளர் அரசு தரப்பு சாட்சியாக மாறினார்

Published On 2022-11-08 06:31 GMT   |   Update On 2022-11-08 06:31 GMT
  • மணீஷ் சிசோடியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
  • தினேஷ் அரோரா அரசு தரப்பு சாட்சியாக மாறி உள்ளதால் மணீஷ் சிசோடியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

புதுடெல்லி:

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கு அடுத்தபடியாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா அதிகாரத்தில் உள்ளார்.

இந்த நிலையில் டெல்லி அரசின் மதுபான கொள்ளை முறைகேடு தொடர்பாக துணைநிலை ஆளுனர் வினய்குமார் சக்சேனா பரிந்துரையின்பேரில் சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மணீஷ் சிசோடியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியா முதல் நபராக சேர்க்கப்பட்டார்.

சோதனையின்போது எந்த ஆவணமும் கைப்பற்றபடவில்லை என்றும் அரசியல் வழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் கூறி இருந்தார்.

இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளர் தினேஷ் அரோராவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த வாரம் அவருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள தினேஷ் அரோரா அப்ரூவராக மாறியுள்ளார். அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி உள்ளதாக சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளது.

அந்த மனுவில் வழக்கு விசாரணைக்கு தினேஷ் அரோரா முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் அரோரா அரசு தரப்பு சாட்சியாக மாறி உள்ளதால் மணீஷ் சிசோடியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.

Tags:    

Similar News