இந்தியா

சிறுநீர் கழித்த சம்பவம்- பழங்குடியின வாலிபரின் காலை கழுவி வருத்தம் தெரிவித்த சிவராஜ்சிங் சவுகான்

Published On 2023-07-06 09:37 GMT   |   Update On 2023-07-06 10:49 GMT
  • பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா பா.ஜனதாவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
  • சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரின் காலை கழுவி முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்தார்.

போபால்:

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அங்கு ஒரு நபர் அலட்சியமாக சிகரெட் பிடித்தவாறு பழங்குடியின வாலிபரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சி வீடியோ செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் பரவியது.

சித்தி மாவட்டத்தின் பஹ்ரி அருகே உள்ள குப்ரி என்ற கிராமத்தை சேர்ந்த பிரவேஷ்சுக்லா என்பவர் தான் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தது என்பது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரான தஸ்மத் ராவத்தும் அதே கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

இதற்கிடையே பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா பா.ஜனதாவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ராகுல்காந்தியும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, 'குற்றவாளிக்கு மதம், சாதி, கட்சி போன்ற பாகுபாடு கிடையாது. கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக அவர் கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றப்பட மாட்டார் என்றார்.

அதை தொடர்ந்து இந்திய தண்டனை சட்டத்தின் 294, 504 ஆகிய பிரிவுகள், வன்கொடுமை தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் பிரவேஷ் சுக்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரின் காலை கழுவி முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்தார்.

இன்று காலை பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரை நாற்காலியில் உட்கார வைத்து முதல்-மந்திரி சவுகான் கீழே அமர்ந்து காலை கழுவினார். அதோடு நடந்த சம்பவத்துக்காகவும் பழங்குடியின வாலிபரிடம் முதல்-மந்திரி மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News