இந்தியா

பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டம்- 'அவங்க முடிவு, நாம என்ன செய்ய முடியும்?' பிரிஜ் பூஷன் சிங்

Published On 2023-05-31 03:35 GMT   |   Update On 2023-05-31 03:36 GMT
  • மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றனர்.
  • மல்யுத்த போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர்.

மல்யுத்த வீரர், விராங்கனைகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்- மல்யுத்த வீரர்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

"டெல்லி காவல் துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருந்தால், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும். இன்று தங்களது பதக்கங்களை கங்கையில் வீச அவர்கள் ஹரித்வார் சென்றனர். ஆனால், பதக்கங்களை அவர்கள் டிகைட்-இடம் ஒப்படைத்தனர். அது அவர்களது முடிவு, அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்று பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்தார்.

மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் பிரிஜ் பூஷன் சிங் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற புதிய பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு பிரிஜ் பூஷன் சிங் வருவதை அறிந்த, மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றனர்.

பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை டெல்லி காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், தான் மல்யுத்த போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசி போராட்டம் நடத்துவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று அறிவித்தனர். அதன்படி ஹரித்வார் வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் விவசாயிகள் சங்க தலைவர் நரேஷ் டிகைட் பேச்சுவார்த்தை நடத்தி, பதக்கங்களை வீச வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

இவரது கோரிக்கைக்கு இணங்க, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வீசும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, பதக்கங்களை டிகைட்-இடம் ஒப்படைத்தனர். மேலும் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு ஐந்து நாட்கள் கெடு வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News