லல்லு குடும்பத்தில் விரிசல்: அண்ணனை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் பிரசாரம்
- தனக்கு எதிராக தம்பி பிரசாரத்தில் ஈடுபட்டது தேஜ் பிரதாப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
- கட்சியை விட பொதுமக்களே எனக்கு எஜமானர்கள்.
பாட்னா:
பீகாரில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த முன்னாள் முதல்-மந்திரி லல்லு பிரசாத் யாதவ் குடும்பம் அரசியல் பகையால் பிரிந்து கிடக்கிறது. அவரது மகன்கள் தேஜ்பிரதாபும், தேஜஸ்வியும் எதிர் எதிராக களம் இறங்கிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
தந்தை லல்லு பிரசாத் யாதவ்வை பிரிந்துள்ள அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் ஜன்சக்தி ஜனதா தளம் (ஜே.ஜே.டி.) என்ற கட்சியை தொடங்கினார். தேர்தலில் மஹீவா சட்டசபை தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் இவர் முதல் முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவருக்கு எதிராக அவரது தம்பியும் முதல்-மந்திரி வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் முகேஷ் ரவுசான் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேஜஸ்வி யாதவ் பிரசாரம் செய்தார். தனது கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யுமாறு அவர் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார்.
தனக்கு எதிராக தம்பி பிரசாரத்தில் ஈடுபட்டது தேஜ் பிரதாப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர் கூறியதாவது:-
அவர் (தேஜஸ்வி யாதவ்) எனக்கு எதிராக பிரசாரம் செய்து இருப்பதால் அவர் போட்டியிடும் ரகோபூர் தொகுதியில் நான் அதையே செய்வேன். கட்சியை விட பொதுமக்களே எனக்கு எஜமானர்கள்.
மஹீவா மக்கள் விரும்பினால் இந்த முறை நான் முதல்-மந்திரி ஆவேன். எனது கட்சி 20-ல் இருந்து 30 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்
ஒரே குடும்பத்தில் அண்ணன்-தம்பி இடையே நடந்து வரும் இந்த மோதல் பீகார் அரசியலை சூடாக்கி இருக்கிறது. தேஜ்பிரதாப் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் குடும்பத்தை விட்டும் அவர் பிரிந்தார். தற்போது அவருக்கு எதிரான விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.