இந்தியா

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இந்த வாரம் அறிவிப்பு: அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம்

Published On 2023-10-03 07:23 GMT   |   Update On 2023-10-03 07:23 GMT
  • பிரதமர் மோடி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
  • மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி பாதியில் கவிழ்ந்ததால் தற்போது பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது.

புதுடெல்லி:

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடி வடைகிறது.

இதையடுத்து வருகிற டிசம்பர் மாதம் இந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு 5 மாநில தேர்தல் முடிவுகள் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது

தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி விட்டது. ஒரு சில மாநிலங்களில் வேட்பாளர்களை அறிவித்து பாரதிய ஜனதா கட்சி தேர்தல் களத்தில் குதித்து விட்டது. பிரதமர் மோடி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரசுக்கு ஆதரவாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த மாநில கட்சிகளும் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் தேர்தல் கமிஷனும் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை தொடங்கி விட்டது. தெலுங்கானா தவிர மற்ற 4 மாநிலங்களிலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை நடத்தினார்கள்.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்தி பாண்டே, அருண் கோயல் ஆகியோர் அடங்கிய குழுவினர் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தலைமை செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி.க்கள், கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் என அனைத்து துறை அதிகாரிகளுடன் தேர்தல் நடத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொண்ட னர்.

தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் 3 நாட்கள் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை நடத்த உள்ளனர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தல் தொடர்பாக நடத்தி வரும் ஆலோசனை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இதனால் இந்த வார இறுதிக்குள் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி குறித்த அட்டவணை வெளியாகலாம் என தெரிகிறது. தேர்தலை பல கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை அதே ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானாவில் தற்போது முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது. இம்முறை 2-வது இடத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி உள்ளது. தெலுங்கானாவில் தொடர்ந்து 3-வது முறையாக வென்று ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதியும், எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வேட்கையில் பாரதிய ஜனதாவும் உள்ளது. இதற்காக பாரதிய ஜனதா புதிய வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் போராடி வருகிறது. ஆனால் பாரதிய ஜனதாவுக்கும் கடந்த தேர்தலை விட இம்முறை செல்வாக்கு அதிகரித்து உள்ளதால் இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் பலப்பரீட்சை ஏற்பட்டு உள்ளது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி பாதியில் கவிழ்ந்ததால் தற்போது பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது. இம்முறையும் ஆட்சியை கைப்பற்ற இரு கட்சிகளும் மும்முரமாக உள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரசும், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் மிசோரம் தேசிய முன்னணியும் ஆட்சியில் உள்ளது.

இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரசாரம் சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News