செய்திகள்
சந்திர கிரகணம்

580 ஆண்டுக்கு பிறகு இன்று நீண்ட சந்திர கிரகணம் - இந்தியாவின் வடமாநிலங்களில் காணலாம்

Published On 2021-11-18 21:33 GMT   |   Update On 2021-11-19 08:17 GMT
அடுத்த முறை நீண்ட நேர சந்திர கிரகண நிகழ்வு 2,669-ம் ஆண்டுதான் ஏற்படும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. 

ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் நிகழ்கின்றன. சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் இன்று (19-ம் தேதி) நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 11.32 மணி முதல் மாலை 5.34 மணிவரை, அதாவது 6 மணி 2 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும்.

இதற்கு முன்பு நீண்ட சந்திர கிரகணம் 1440-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி ஏற்பட்டது. சுமார் 580 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தான் நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இத்தகைய நிகழ்வு மீண்டும் 2,669-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி தோன்றும்.

இந்த சந்திர கிரகணத்தை வடகிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட இடங்களில் பார்க்க முடியும்.

இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் சந்திர உதயத்துக்கு பின்னர் மிகவும் குறுகிய நேரம் கிரகணம் தென்படும். தமிழகம் உள்பட பிற பகுதிகளில் தெரியாது என்று வானியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News