செய்திகள்
கேதார்நாத் கோவில்

குளிர்காலத்தையொட்டி கேதார்நாத் கோவில் நடை சாத்தப்பட்டது

Published On 2021-11-06 09:52 IST   |   Update On 2021-11-06 09:52:00 IST
இன்னும் 6 மாத காலத்திற்கு கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் என சார் தாம் தேவஸ்தான நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உலகப் புகழ் பெற்ற கேதார்நாத் சிவாலயம் உள்ளது. இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இங்கு பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டு பலன் பெற்றதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கையின் கிளை நதிகளில் ஒன்றான மந்தாகினி நதியின் கரையோரம் அமைந்துள்ள இந்த கோவில், குளிர்காலத்தின்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதால் நடை சாத்தப்படும்.

அவ்வகையில் குளிர்காலத்தை ஒட்டி இன்று கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில் நடை சாத்தப்பட்டது. இன்று காலையில் சிறப்பு வழிபாட்டு விழாவிற்கு பின்னர் காலை 8 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இன்னும் 6 மாத காலத்திற்கு கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் என சார் தாம் தேவஸ்தான நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட நான்கு புராதன யாத்திரைத் தலங்களை தரிசிப்பது சார் தாம் யாத்திரை எனப்படும். 

இந்த சார் தாம்களில் பத்ரிநாத் கோவில் வரும் 20ம் தேதி நடை சாத்தப்படுகிறது. கங்கோத்ரியில் நேற்று சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நடை சாத்தப்பட்டது.

இந்த ஆண்டு சார் தாம் யாத்திரை செப்டம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கியது. அக்டோபர் 22ம் தேதி வரை 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டதாக சார் தாம் தேவஸ்தான நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News