செய்திகள்
விபத்தில் பலியான ரமேஷ், மனைவி தீபா

டேங்கர் லாரி மீது ஆம்னி வேன் மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

Published On 2021-05-31 22:49 GMT   |   Update On 2021-05-31 22:49 GMT
கிருஷ்ணகிரி அருகே கியாஸ் டேங்கர் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி:

வேலூர் மாவட்டம் துரிஞ்சிதலைப்பட்டியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருடைய மகன் ரமேஷ் (வயது 35). இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசித்து வந்தார். ரமேஷ் பெங்களூருவில் வெல்டிங் பட்டறை வைத்திருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ரமேஷ் தனது குடும்பத்தினருடன் ஆம்னி வேனில் குடியாத்தம் சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று காலை அவர்கள் ஆம்னி வேனில் பெங்களூருவுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.



ஆம்னி வேனை ரமேஷ் ஓட்டி வந்தார். அவருடன், அவரது மனைவி தீபா (30), மகன் நித்தீஷ் (1) மற்றும் உறவினர்கள் துரிஞ்சிதலைப்பட்டியை சேர்ந்த அஞ்சலி (34), வேலூர் மாவட்டம் கே.மோட்டூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி சரளா (35), அவர்களது குழந்தைகள் சாரிகா (9), ஓவியா (5) ஆகியோர் இருந்தனர்.

நேற்று மதியம் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுண்டம்பட்டி அருகே ஆம்னி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் கியாஸ் டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த சமயம் கண்இமைக்கும் நேரத்தில் டேங்கர் லாரியின் பின்புறம் ஆம்னி வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த ரமேஷ், அவரது மனைவி தீபா, குழந்தை நித்தீஷ், உறவினர் அஞ்சலி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். வேனில் இருந்த சரளா மற்றும் சிறுமிகள் சாரிகா, ஓவியா ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டனர். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. சிறுமிகள் சாரிகா, ஓவியா ஆகியோருக்கு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News