செய்திகள்
பினராய் விஜயன்

கொரோனா தடுப்பூசி வாங்க ஆட்டை விற்று முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கிய மூதாட்டி

Published On 2021-04-24 15:14 IST   |   Update On 2021-04-24 15:14:00 IST
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரளாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரளாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடவும் மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி வேண்டுமென்று கேட்டது.இது பற்றி முதல் மந்திரி பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சைக்காக அரசு பெருமளவு செலவு செய்கிறது.இப்போது தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ரூ.400 என விலை நிர்ணயம் செய்துள்ளது. கேரளாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்றால் ரூ.1300 கோடி கூடுதல் சுமை ஏற்படும்.

இந்த சுமையை தாங்குவது இயலாத காரியமாகும். எனவே மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும். கடந்த சில நாட்களாக தடுப்பூசி வாங்குவதற்காக ஏராளமானோர் நிதி உதவி செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் ரூ.1 கோடி கிடைத்துள்ளது.

முதல்வர் நிவாரண நிதியில் இதற்காக தனியாக ஒரு சிறப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ல் கேரளாவில் வெள்ளபெருக்கு ஏற்பட்ட போது சுபைதா என்ற மூதாட்டி தனது ஆட்டை விற்று ரூ.5 ஆயிரத்து 310 அளித்தார்.

அவர் தற்போது தடுப்பூசி வாங்குவதற்கு மீண்டும் தனது ஆட்டை விற்று ரூ.5 ஆயிரம் வழங்கி உள்ளார். இது மிகவும் பாராட்டுக்குரியதாகும். இவரை போன்று இன்னும் ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி வாங்க நிதி வழங்கி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா தடுப்பூசி வாங்க மூதாட்டி சுபைதா ஆட்டை விற்று பணம் வழங்கியது சமூக வலை தளங்களில் வெளியானது.

இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

Similar News