செய்திகள்
எடியூரப்பா

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி: எடியூரப்பா

Published On 2021-02-11 03:12 GMT   |   Update On 2021-02-11 03:12 GMT
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :

பெங்களூரு அருகே கும்பலகோடு பகுதியில் உள்ள பி.ஜி.எஸ். அறிவுசார் நகரில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த மைதானத்தை திறந்து வைத்து பேசும்போது கூறியதாவது:-

குழந்தைகளின் உடல் வலிமை பெறுவதில் விளையாட்டுக்கு முக்கிய இடம் உள்ளது. மாநில அரசு விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகிறது. வருகிற ஒலிம்பிக் போட்டியில் கர்நாடகத்தை சேர்ந்த வீரர்கள் பதக்கம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வீரர்களுக்கு எலகங்காவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாலகங்காதரநாதசுவாமி கல்வி, சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அவரது பாதையில் நிர்மலாந்தநாத சுவாமி சென்று கொண்டிருக்கிறார்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் அற்புதமாக உள்ளது. இந்த மைதானத்தை விளையாட்டு வீரர்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கல்வியுடன் விளையாட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது. விளையாட்டுடன் பெறும் கல்வி தான் முழுமை பெறுகிறது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேசுகையில், "விளையாட்டு ஒருவரின் மனநிலை மற்றும் உடல்நிலையை கட்டுக்குள் வைக்கிறது. இளம் சமுதாயத்தினர் உடல்நலனில் அக்கறை செலுத்தி நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது நல்லது. இதற்கு விளையாட்டு உதவுகிறது" என்றார். இந்த நிகழ்ச்சியில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News