செய்திகள்
கொரோனா வைரஸ்

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் 47 பேருக்கு கொரோனா- 6 ஆயிரம் பேர் கண்காணிப்பு

Published On 2020-12-25 19:46 IST   |   Update On 2020-12-25 19:46:00 IST
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்கள் 6,000பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 47 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இங்கிலாந்தில் கூடுதல் வீரியத்துடன் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் இங்கிலாந்துடன் விமானம், ரெயில் போக்குவரத்துகளை ரத்து செய்துள்ளன.

இந்தியாவும் விமானங்களை ரத்து செய்திருக்கிறது. அத்துடன் சமீப காலத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி கடந்த நவம்பர் மாதம் 25-ந்தேதி முதல் இந்த மாதம் 23-ந்தேதி வரை இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறே இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் 6,000பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஏற்கனவே 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இப்போது கூடுதலாக 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 47 பேரை கொரோனா தாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 11 பேருக்கு தொற்று உள்ளது.

ஆனால் இவர்கள் அனைவருக்குமே சாதாரண வகை கொரோனா தொற்றுதான் ஏற்பட்டு இருக்கிறது. இங்கிலாந்தில் புதிதாக உருவாகி உள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் இவர்களுக்கு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு 2,724 பேர் இங்கிலாந்தில் இருந்து சமீப காலங்களில் வந்துள்ளனர். அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Similar News