செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து விவகாரம், பிரதமர் மோடி பிரச்சாரம், 75 ரூபாய் நாணயம் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Published On 2020-10-16 08:13 GMT   |   Update On 2020-10-16 09:13 GMT
பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, 75 ரூபாய் நாணயம் வெளியீடு, ஹத்ராஸ் வழக்கில் எஸ்ஐடி விசாரணை நிறைவு உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.
* வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

* உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

* பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் மோடி வரும் 23ம் தேதி தொடங்க உள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவு 28ம் தேதி நடைபெற உள்ளது.

* ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை நிறைவடைந்தது. இதனையடுத்து விசாரணைக்குழு விரைவில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.‘

* பா.ஜனதா அரசு கோழைத்தனமான அரசியலை செய்கிறது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

* மகாராஷ்டிரா கவர்னர் மாளிகையின் கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்து உள்ளது.


* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 73.70 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 63,371 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 64.53  லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 1.12 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 26-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது

* அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி உள்ளார். உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்படலாம், நுழைவுத் தேர்வு மற்றும் கூடுதல் கட்டணத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

* நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது என்றும் அரசு தெரிவித்துள்ளது

* தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு ஆம்னி பஸ்கள் இன்று அதிகாலை முதல் ஓட தொடங்கின. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

* தமிழகம் முழுவதும் கிசான் திட்ட மோசடியில் ஈடுபட்டவர்களில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

* அமெரிக்காவில் மீண்டும் பொது முடக்கம் கிடையாது என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

* ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா ஊசியை போட்டுக்கொள்பவர்கள் குரங்குகளாகிவிடும் அபாயம் இருப்பதாக ரஷியா வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

* டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், கனடா வீரர் ஜாசன் அந்தோணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

* அசாம் மாநிலத்தை சேர்ந்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான லவ்லினா போர்கோஹைன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

* இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ், முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, தனுஷின் 44-வது படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News