செய்திகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வருமான வரியில் மாற்றமா? - நிர்மலா சீதாராமன் விளக்கம்

Published On 2020-02-02 21:43 GMT   |   Update On 2020-02-03 00:57 GMT
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விதிக்கப்படும் வருமான வரி குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி:

2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் எந்த நாட்டிலும் வருமான வரி செலுத்தாத பட்சத்தில் அவர் இந்தியாவில் வசிப்பவராக கருதப்பட்டு அவருக்கு வருமான வரி விதிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அதாவது வெளிநாடுகளில் ஈட்டும் வருமானத்துக்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டுமோ? என்ற கேள்வி அவர்களிடையே எழுந்தது.

இதற்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று விளக்கம் அளித்துள்ளார். மத்திய பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:-

வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் இந்தியாவில் ஈட்டும் வருமானத்துக்குத்தான் நாங்கள் வரி வசூலிக்கிறோம். வெளிநாடுகளிலோ அல்லது வரி வரம்பு இல்லாத பகுதியிலோ அவர் ஈட்டும் வருமானத்தை நான் ஏன் இந்த வரி வரம்புக் குள் உள்ளடக்கப்போகிறேன்?

வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்கு இங்கு (இந்தியாவில்) ஒரு சொத்து இருந்து, அதில் இருந்து வாடகை எதுவும் உங்களுக்கு வந்தால் அதற்கு இங்கேயோ அல்லது அங்கேயோ நீங்கள் வரி செலுத்தாமல் இருக்கிறீர்கள். ஆனால் அந்த சொத்து இந்தியாவில் இருக்கும் நிலையில், அதற்கான வரி வசூலிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது.

நீங்கள் துபாயில் சம்பாதிக்கும் பணத்துக்கு நான் வரி வசூலிக்கப்போவதில்லை. நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக இருக்கலாம், ஆனால் உங்களுக்கு இங்குள்ள சொத்து மூலம் கிடைக்கும் வாடகைதான் பிரச்சினையே. எனவே அதன் மீதுதான் நாங்கள் வரி வசூலிக்கிறோம்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அடுத்த நிதியாண்டில் மத்திய அரசின் பங்கு விற்பனை மூலம் ரூ.2.11 லட்சம் கோடி இலக்கு எட்டப்படும் எனக்கூறிய நிர்மலா சீதாராமன், இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு இருப்பதாகவும், எல்.ஐ.சி.யின் சிறிய பங்கை விற்பதால் மட்டும் இந்த இலக்கை எட்ட முடியாது என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் இந்தியாவில் வசிப்பவராக கருதப்பட்டு வரி வசூலிக்க வகை செய்யும் 182 நாட்கள் தங்கியிருக்கும் காலத்தை 120 நாட்களாக குறைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக வருமான வரிச்சட்டம் 1961-ன் 6-வது பிரிவில் திருத்தம் கொண்டுவருவதை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த ஏராளமானோர் மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பதாகவும், அவர்களில் பலர் தங்கள் குடும்ப விவகாரங்களுக்காக சொந்த ஊர் வந்து செல்வதாகவும் கூறியுள்ள பினராயி விஜயன், இந்த சட்ட திருத்தம் அவர்களை வெகுவாக பாதிக்கும் எனவும் தெரிவித்து உள்ளார். மேலும் வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் அவர்கள் இடம் மாறுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
Tags:    

Similar News