செய்திகள்
கோவா முதல்வர் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்த காட்சி.

கோவாவில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்

Published On 2019-07-10 21:41 IST   |   Update On 2019-07-10 21:41:00 IST
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
பனாஜி:

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டார். 

முன்னதாக, கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.

இதுதொடர்பாக, கோவா சட்டசபையில் 20-3-2019 அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.

கோவா சட்டசபையில் ஆட்சி அமைக்க மொத்தம் 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலையில், பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு 20 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்திருந்தனர். 

இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் உள்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை சட்டசபை சபாநாயகர் ராஜேஷ் பட்னேக்கரை சந்தித்தினர். காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதாக சபாநாயகரிடம் அவர்கள் கடிதம் அளித்தனர்.

இதையடுத்து, அவர்கள் 10 பேரும் பாஜகவில் இணைந்து விட்டதாக முதல் மந்திரி பிரமோத் சாவந்த்  இன்றிரவு தெரிவித்துள்ளார். 

சட்டசபையில் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு கட்சியை சேர்ந்த மொத்த எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு அக்கட்சியில் இருந்து விலகினால் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News