செய்திகள்
கர்நாடகாவில் மேலும் இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
கர்நாடகா மாநிலத்தில் 14 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் அங்கு அரசியல் சூறாவளி எழுந்துள்ள நிலையில் இன்று மேலும் இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் பதவி விலகிய 14 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகரை அறிவுறுத்தக்கோரி கர்நாடக மாநில கவர்னரிடம் எடியூரப்பா இன்று மனு அளித்தார்.
மேலும், சபாநாயகர் ரமேஷ் குமாரை இன்று மாலை சந்தித்த எடியூரப்பா 14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்குமாறு வலியுறுத்தினார். இந்த ராஜினாமா விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுத்துவிட முடியாது. உரிய நடைமுறைகளை பின்பற்றி வரும் 17-ம் தேதிக்குள் எனது முடிவை அறிவிப்பேன் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் பதிலளித்தார்.
இந்நிலையில், அங்குள்ள அரசியல் நிலவரத்தை மிகவும் மோசமாக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களான எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் இன்று சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.
இதனால், குமாரசாமியின் ஆட்சிக்கு அங்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.