செய்திகள்

பாஜகவில் இணைந்த மகனுக்காக பிரசாரம் செய்யும் காங்கிரஸ் தலைவர்

Published On 2019-04-17 06:35 GMT   |   Update On 2019-04-17 06:35 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவில் இணைந்த மகனுக்காக, அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராதாகிருஷ்ணா விகே பாட்டீல் பிரசாரம் செய்துள்ளார். #RadhakrishnaVikhePatil
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 18,23,29 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராதாகிருஷ்ணா விகே பாட்டீலின் மகன் சுஜெய் பாட்டீல் ஆவார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் சுஜெய்க்கு சீட் வழங்கப்படாததால், அதிருப்தி அடைந்தார். இதையடுத்து சுஜெய் கடந்த மாதம் பாஜகவில்  இணைந்தார். பின்னர் அகமதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக சுஜெய் பாட்டீல் அறிவிக்கப்பட்டார்.



இதனையடுத்து ராதாகிருஷ்ணா, காங்கிரஸ் சார்பில் அகமது நகர் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யப்போவதில்லை என கூறினார். ஆனால், பாஜகவில் இணைந்து போட்டியிடும் மகனுக்காக அகமது நகருக்கு வெளியே  உள்ள ரகுலி பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகளை அழைத்து பிரசாரம் செய்துள்ளார்.

இந்நிகழ்ச்சியை பதிவு செய்ய முயன்ற தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர்களையும் ராதாகிருஷ்ணா பாட்டீலின் ஆதரவாளர்கள் மிரட்டி அனுப்பிவிட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

மேலும் இதுகுறித்து ராதாகிருஷ்ணா பாட்டீல் கூறுகையில், ‘நான் இப்போதும் காங்கிரஸில்தான் இருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட பலத்தைக் காண்பிப்பதற்காக  இந்தக் கூட்டத்தை நடத்தினேன். இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துக்கும் நான் தெரிவித்துவிட்டேன்’ என கூறினார். #RadhakrishnaVikhePatil


Tags:    

Similar News