செய்திகள்

பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்- பிகானர் கலெக்டர் அதிரடி உத்தரவு

Published On 2019-02-19 10:38 GMT   |   Update On 2019-02-19 10:38 GMT
ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். #PulwamaAttack #BikanerCollectorAction
பிகானர்:

காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.

பல்வேறு நாடுகளின் தலைவரும், அமைப்புகளும் இந்த கோர தாக்குதலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். தாக்குதலைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானர் கலெக்டர் குமார் பால் கவுதம், அதிரடியாக நடவடிக்கை  மேற்கொண்டுள்ளார்.  பிகானர் மாவட்டத்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு புல்வாமாவில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள  ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் என அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவு  2 மாதங்கள் வரை செல்லுபடியாகும். மேலும் பாகிஸ்தான் சிம் கார்டுகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #PulwamaAttack #BikanerCollectorAction
Tags:    

Similar News