செய்திகள்

காஷ்மீரில் ரூ.12 ஆயிரம் கோடி திட்டங்கள் - மோடி தொடங்கி வைத்தார்

Published On 2019-02-03 12:34 IST   |   Update On 2019-02-03 12:34:00 IST
காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி உரையாற்றினார். #Modiunveils #developmentprojects #ModiinLadakh
ஜம்மு:

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக இன்று காலை காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்கு வந்தார். லே விமான நிலையத்தில் அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக் மற்றும் அரசு உயரதிகாரிகள் பிரதமருக்கு மலர் கொத்துகளை அளித்து வரவேற்றனர்.

லே விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான 480 கோடி ரூபாய் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய மோடி, டட்டா கிராமத்தில் 9 கிலோவாட் ஆற்றல் கொண்ட ஆற்றுநீர் மின்சார உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும்,  ஸ்ரீநகர்-டிராஸ்-கார்கில்-லே பகுதிகளுக்கு இடையில் 220 கிலோவாட் திறன் கொண்ட மின் வழித்தடப் பாதையை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். லே, கார்கில், நுப்ரா, ஜன்ஸ்கர், டிராஸ், கால்ட்சி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளை ஒருமுகப்படுத்தும் வகையில் லடாக் பல்கலைக்கழகத்தை மோடி இன்று திறந்து வைத்தார்.


பின்னர் லே பகுதியில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய மோடி, கடந்த ஆண்டில் லடாக் மற்றும் கார்கில் பகுதிக்கு சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக குறிப்பிட்டார். பாதுகாக்கப்பட்ட பகுதிகளை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி 10 நாட்களில் இருந்து தற்போது 15 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் லடாக் பகுதியின் இயற்கை அழகை அவர்கள் அதிகமாக கண்டு மகிழலாம் என்றார்.

விரைவில் பிலாஸ்பூர்-மனாலி-லே ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டதும் டெல்லி-லே பகுதிகளுக்கு இடையிலான தூரம் வெகுவாக குறைந்துவிடும். இதன் மூலம் இப்பகுதியில் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சி அடையும் எனவும் மோடி நம்பிக்கை தெரிவித்தார். #Modiunveils #developmentprojects #ModiinLadakh

Similar News