செய்திகள்
கோப்புப்படம்

மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயிலுக்கு சாத்தியம் இல்லை: ஆய்வு அறிக்கையில் தகவல்

Published On 2018-12-25 11:52 GMT   |   Update On 2018-12-25 11:52 GMT
மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #BulletTrain
புதுடெல்லி:

நரேந்திர மோடி பிரதமர் ஆனதும் புல்லட் ரெயில் திட்டத்தை இந்தியாவில் கொண்டு வர ஆர்வம் காட்டினார்.

அதன்படி அகமதாபாத்தில் இருந்து டெல்லிக்கும், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கும் 2 வழித்தடங்களில் புல்லட் ரெயில் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.

அதில் அகமதாபாத்- டெல்லி ரெயில் பாதை திட்டம் ஆய்வுகள் முடிக்கப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

ஆனால், மும்பை- அகமதாபாத் ரெயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை மத்திய அரசும், மராட்டிய மாநில அரசும் இணைந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. சர்வதேச கடன் உதவியுடன் அதை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்தன.

ஆனால், இப்போது இந்த திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்து தகவல் அறியும் சட்டத்தின்படி சமூக சேவகர் ஒருவர் மராட்டிய போக்குவரத்து துறையிடம் இருந்து பதிலை பெற்றுள்ளார்.

அதில், புல்லட் ரெயில் திட்டத்துக்கு சாத்தியம் இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.

இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வில் நிதி காரணங்களாலும், நிலம் எடுப்பதில் உள்ள பிரச்சனைகளாலும் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று கூறி உள்ளனர்.

முதலில் இந்த திட்டத்தை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து திட்டம் மற்றும் நிதித்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாடுகளில் பொருளாதார ரீதியில் சிக்கனமான முறையில் எந்த இடத்தில் புல்லட் ரெயில் சேவை நடத்தப்படுகிறது என்று முதலில் ஆய்வு செய்தனர்.

அதை ஒப்பிட்டு மும்பை- அகமதாபாத் ரெயில் திட்டத்தை நிறைவேற்றலாமா? என்று ஆலோசித்தனர்.

அதன்பிறகு இதற்கு ஆகும் செலவுகள், கடனை வாங்கி விட்டு திருப்பி செலுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றியும் ஆய்வு நடத்தினார்கள்.

மும்பை நகருக்குள் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

மும்பையில் பாந்திரா, குர்லா போன்ற இடங்களில் ரெயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கு நிலம் எடுப்பதற்கும், தண்டவாள பாதைக்கான இடம் எடுப்பதற்கும் பல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்பட்டது. ஏற்கனவே மாநில அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

இந்த நிலையில் புல்லட் ரெயிலுக்காக பெருமளவு செலவு செய்ய முடியாது என்றும் தெரிய வந்தது.

இவை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக ஆய்வு செய்ததில் திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. #BulletTrain
Tags:    

Similar News