செய்திகள்

மந்திரி டி.கே.சிவக்குமாருடன் எடியூரப்பா சந்திப்பு

Published On 2018-11-30 07:32 GMT   |   Update On 2018-11-30 07:32 GMT
மந்திரி டி.கே.சிவக்குமாரை எடியூரப்பா சந்தித்து பேசியது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Yeddvurappa #BJP

பெங்களூரு:

கர்நாடகத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வராவும் உள்ளனர்.

நீர்பாசன துறை மந்திரியாக டி.கே. சிவக்குமார் உள்ளார். கர்நாடகத்தில் கூட்டணி அரசை உருவாக்குவதில் முக்கிய பங்கை வகித்தார்.

இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரை முன்னாள் முதல் மந்திரியும், கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவருமான எடியூரப்பா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பின்னணியில் அரசியல் மாற்றம் இருப்பதாகவும், பாரதிய ஜனதாவில் வந்து சேரும்படி டி.கே.சிவக்குமாருக்கு, எடியூரப்பா அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

முதல் மந்திரியாக உள்ள குமாரசாமி இருதய கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு ஏற்கனவே 2 முறை அறுவை சிகிச்சை நடந்து உள்ளது. மீண்டும் அவர் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதாகவும், வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் அவர் முதல் மந்திரி பொறுப்பை, காங்கிரசை சேர்ந்த துணை முதல் மந்திரி பரமேஸ்வராவிடம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


 

முதல் மந்திரி பொறுப்பை சகோதரர் ரேவண்ணா அல்லது மனைவி அனிதா குமாரசாமி ஆகிய இருவரில் ஒருவரிடம் ஒப்படைக்க குமாரசாமி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மந்திரி டி.கே.சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எடியூரப்பா திடீரென்று டி.கே.சிவக்குமாரை சந்தித்தது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமாரசாமி சிகிச்சைக்கு செல்ல முதல் மந்திரி பொறுப்பை ஒப்படைக்க ஆதரவு கொடுக்க கூடாது என்று டி.கே. சிவக்குமாரை எடியூரப்பா வலியுறுத்தியதாகவும், இவர்கள் இருவரும் சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்க போவதாகவும் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. #Yeddvurappa #BJP

Tags:    

Similar News