செய்திகள்

சி.பி.ஐ. இயக்குனருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அறிக்கையை அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2018-11-16 09:52 GMT   |   Update On 2018-11-16 09:52 GMT
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கு அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #CBI #CVC #AlokKumar #CBIDirector
புதுடெல்லி:

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்ட நிலையில் தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


ராகேஷ் அஸ்தானா

அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நீதிபதி பட்நாயக் மேற்பார்வையில் மத்திய ஊழல் தடுப்பு குழு ஒன்றை நியமித்து கடந்த 26-10-2018 சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இரண்டு வாரங்களுக்குள் விசாரணையை முடித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.

விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் வழக்கறிஞர் துஷார் மேத்தா கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வு மறுவிசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது விசாரணை அறிக்கையின் நகலை சீலிட்ட உறையில் வைத்து அலோக் வர்மாவிடம் வழங்குமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.

இதுவரை பெறப்பட்ட விசாரணை அறிக்கையில் காணப்படும் சில விபரங்கள் திருப்திகரமாகவும், சில அதிருப்தியான வகையிலும் காணப்படுவதால் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த அறிக்கை தொடர்பான தனது பதிலை தெரிவிக்குமாறு அலோக் வர்மாவை அறிவுறுத்தி, மறுவிசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தனக்கும் இந்த விசாரணை அறிக்கையின் நகலை அளிக்க வேண்டும் என்ற  ராகேஷ் அஸ்தானாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். #CBI #CVC #AlokKumar #CBIDirector

Tags:    

Similar News