செய்திகள்
மும்பையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு- காப்பாற்ற சென்ற 4 பேரும் பலியான சோகம்
மும்பையில் கிணற்றை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி தொழிலாளர் மற்றும் அவரை காப்பாற்றச் சென்ற 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #PoisonousGas
மும்பை:
மும்பை புறநகரான கல்யாண் பகுதியில் உள்ள கோவில் கிணற்றில் இன்று சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. ஒரு தொழிலாளி கிணற்றுக்குள் இறங்கி சுத்தம் செய்யத் தொடங்கினார். உள்ளே சென்றவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. வெகுநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால், கோவில் ஊழியர் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கினார். அவரும் வரவில்லை. எனவே, அவரை மீட்பதற்காக அவரது தந்தை இறங்கினார். அவரும் மேலே வரவில்லை.
இதையடுத்து தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக உள்ளே இறங்கிய 2 தீயணைப்பு படை வீரர்களும் மூர்ச்சையாகிவிட்டனர்.
கிணற்றுக்குள் இறங்கிய 5 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரின் உடல்களும் வலை மூலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் பரவியிருந்த விஷ வாயுவை சுவாசித்ததால் 5 பேரும் இறந்திருக்கலாம் என தெரிகிறது.
‘கிணற்றில் உள்ள நீர் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிணற்றை பல நாட்களாக மூடி வைத்திருப்பதால் விஷத்தன்மை கொண்ட வாயு உருவாகியிருக்கலாம்’ என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். #PoisonousGas