செய்திகள்

அசாம் போலி என்கவுண்டர் வழக்கு - ராணுவ மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2018-10-15 08:48 IST   |   Update On 2018-10-15 08:48:00 IST
அசாம் போலி என்கவுண்டர் தொடர்பாக 24 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில், ராணுவ அதிகாரிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #AssamFakeEncounter
கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டில் தேயிலை நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக 9 இளைஞர்களை ராணுவத்தினர் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் இளைஞர்களை நேரில் ஆஜர் செய்யுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்களில் 4 பேர் விடுவிக்கப்பட்டனர். மற்ற ஐந்து பேரும் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தற்காப்பு முயற்சிக்காக அவர்களை சுட்டதாக  ராணுவம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், இது போலி என்கவுண்டர் என்றும், திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்றும் குற்றம்சாட்டிய பாஜக நிர்வாகி ஜெகதீஷ் புயான், ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த விவகாரத்தில் ராணுவ மேஜர் ஏ.கே.லால், கர்னல்கள் தாமஸ் மேத்யூ, ஆ.எஸ்.சிபிரென், கேப்டன்கள் திலிப் சிங், ஜெகதேவ் சிங், நாய்க்ஸ் அல்பிந்தர் சிங், சிவேந்தர் சிங் ஆகிய ஏழு பேருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஜூலையில் அதன் இறுதி வாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், அந்த வழக்கின் மீது சனிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. போலி என்கவுண்டரில் தொடர்புடைய ஏழு அதிகாரிகளும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த ராணுவ நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. #AssamFakeEncounter

Tags:    

Similar News