செய்திகள்

சத்தீஸ்கர் இரும்பு ஆலை விபத்து - தலைமை அதிகாரி பணிநீக்கம்

Published On 2018-10-10 10:24 GMT   |   Update On 2018-10-10 10:24 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலைவெடி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தலைமை செயல் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டார். #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்திய ரெயில்வேக்கு தேவையான தரமான தண்டவாளங்களை தயாரிப்பதில் இந்த ஆலை பிரசித்தி பெற்றது. இதுதவிர கட்டிடங்களுக்கு தேவையான முறுக்கு கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த ஆலை தயாரித்து வருகிறது.

அம்மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் பிலாய் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார்.

இந்நிலையில், இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்றபோது, காலை சுமார் 11 மணியளவில் குழாய் இணைப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 19 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.



சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இன்றைய நிலவரப்படி இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இவ்விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய இரும்பு ஆலை நிர்வாகத்தினர் செயல் தலைமை அதிகாரி (CEO) எம்.ரவி என்பவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆலையின் பொது மேலாளர் பாண்டிய ராஜா மற்றும் துணை பொது மேலாளர் நவீன் குமார் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  #BhilaiSteelPlant  #BhilaiSteelPlantblast
Tags:    

Similar News