செய்திகள்
திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்த காட்சி

கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை - கடைகள் அடைப்பு

Published On 2018-09-10 05:57 GMT   |   Update On 2018-09-10 05:57 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தன. #BharathBandh #PetrolDieselPriceHike
திருவனந்தபுரம்:

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

கேரள மாநிலத்தில் இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.



இதன் காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. வாடகைக்கார்கள், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.

திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தன. வணிக நிறுவனங்களும் செயல்படவில்லை.

திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் பயணிகளை ஏற்றிச்சென்றது. பா.ஜனதா ஆதரவு தொழிற்சங்கத்தினரின் ஆட்டோக்கள் இயக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையங்கள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படவில்லை.

கேரளாவில் உள்ள கல்லூரிகளில் இன்று பல்கலைக்கழக தேர்வுகள் நடக்க இருந்தது. முழு அடைப்பு காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கண்ணூர், கோழிக்கோடு பல்கலைக்கழகங்கள், கொச்சின் அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இன்று நடக்க இருந்த தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. மகாத்மா காந்தி மற்றும் கேரள பல்கலைக்கழகம் வருகிற 15-ந்தேதி வரையிலான தேர்வுகளை தள்ளி வைத்துள்ளது.

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் பாதுகாப்பு அளித்து அனுப்பி வைத்தனர். இது போல ஆஸ்பத்திரி வாகனங்கள், விமான நிலையங்களுக்குச் செல்லும் வெளிநாட்டு பயணிகள் வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.  #BharathBandh #PetrolDieselPriceHike

Tags:    

Similar News