செய்திகள்

மனித உரிமை ஆர்வலர்கள் கைது - மகாராஷ்டிரா போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Published On 2018-09-06 14:10 GMT   |   Update On 2018-09-06 14:10 GMT
பிரதமர் மோடியை கொல்ல சதி என கூறி மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதாக சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. #BhimaKoregaon #UrbanNaxals
புதுடெல்லி:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிராவின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்” என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. 

அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தது. இதனை அடுத்து, வரவர ராவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். 

இதுபோல், தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் நடந்த சோதனையில், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா அமர்வு கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், 5 பேரின் வீட்டுக்காவலை 12-ம் தேதி வரை நீட்டித்தார்.

மேலும், வழக்கில் மிக முக்கியமாக கருதப்படும் ஆவணங்களை மகாராஷ்டிரா போலீசார், செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி பகிரங்கமாக வெளியிட்டது பொறுப்பற்ற செயல் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
Tags:    

Similar News