செய்திகள்

ஐசிஐசிஐ வங்கி மோசடி - தலைமை நிர்வாக அதிகாரியிடம் விசாரணை நடத்த முடிவு

Published On 2018-05-30 19:02 GMT   |   Update On 2018-05-30 19:02 GMT
ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கொச்சாரிடம் வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. #ICICIBankFraud #ICICICEO #ChandaKochhar

புதுடெல்லி:

ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 20 வங்கிகள் கூட்டமைப்பு வீடியோகான் நிறுவனத்துக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.3,250 கோடி கடன் வழங்கியது. இதன்பின், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சாரின் நிறுவனத்துக்கு குறிப்பிட்ட தொகையையும் பங்குகளையும் வீடியோகான் நிறுவனம் முறைகேடாக பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

வீடியோகான் பெற்ற கடனில் சுமார் ரூ.2800 கோடிக்கு மேல் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், வழங்கப்பட்ட ரூ.3250 கோடி கடனும் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் சந்தா கொச்சாரின் குடும்பத்தினர் பயனடைந்துள்ளனர் என இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாப்பு அறங்காவல் குழு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக மத்திய அரசு தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சார் மற்றும் சில வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. 



இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கொச்சாரிடம் விசாரணை நடத்த வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த பிரத்யேக குழுவை அமைக்கப்போவதாகவும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. #ICICIBankFraud #ICICICEO #ChandaKochhar
Tags:    

Similar News