செய்திகள்

மாநில நலனுக்காக பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை மறுத்துள்ளேன் - சந்திரபாபு நாயுடு

Published On 2018-05-24 22:01 GMT   |   Update On 2018-05-24 22:01 GMT
ஆந்திரப்பிரதேசத்தின் நலனுக்காக பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை மறுத்துள்ளேன் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu #PMPost
ஐதராபாத்:

தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டு கூட்டம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேச கட்சி தலைவரும், மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர்கள், சந்திரபபு நாயுடுவை வருங்கால பிரதமர் எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

பிரதமர் பதவி மீது எனக்கு விருப்பம் இல்லை. ஏற்கனவே பிரதமராகும் வாய்ப்பு வந்தபோது மாநில நலனுக்காக அதை மறுத்துள்ளேன்.

இப்போது சிலர் பாஜக- காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் நான் அதை 22 ஆண்டுகளுக்கு முன்னர் செய்து காட்டியுள்ளேன். 1996ல் பிரதமராகும் வாய்ப்பு வந்தது. மாநில நலனுக்காக அதை மறுத்த நான், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவே கவுடாவை பிரதமராக ஆதரவு அளித்தேன்.

இதேபோல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு இல்லாமல் சி மத்தியில் எந்த கட்சியும் ஆட்சி செய்யமுடியாது.

திருப்பதி கோவிலின் நகைகள் எனது வீட்டில் இருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். முதலில் திருப்பதி கோவில் நகை பட்டியலில் இல்லாத வைரம் இப்போது பட்டியலில் இடம்பிடித்தது எப்படி?

அலிபிரியில் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் இருந்து திருப்பதி பெருமாள் என்னை காப்பாற்றி மறுபிறவி கொடுத்துள்ளார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். திருப்பதி தேவஸ்தானம் விவகாரத்தில் பாஜக எந்த நாடகத்தையும் நடத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். #ChandrababuNaidu #PMPost
Tags:    

Similar News