செய்திகள்

ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி - கர்நாடக முதல்வர் எடியூரப்பா முதல் கையெழுத்து

Published On 2018-05-17 06:10 GMT   |   Update On 2018-05-17 06:10 GMT
கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, விவசாயிகளின் ரூ.56 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார். #Yeddyurappa #karnatakafarmloan
பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியான பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.  அதேசமயம், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கைகோர்த்து தங்களுக்கு போதிய மெஜாரிட்டி இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என உரிமை கோரியது.

ஆனால், எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எடியூரப்பா பதவியேற்பை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் தலைமைச் செயலகம் வந்து தனது பணியைத் தொடங்கினார் எடியூரப்பா. முதல் கையெழுத்தாக ரூ.56 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார். இதன்மூலம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய 5000 ரூபாய் முதல் 1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது. #Yeddyurappa #karnatakafarmloan
Tags:    

Similar News