செய்திகள்

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டி.டி.வி.தினகரன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

Published On 2017-05-18 08:26 IST   |   Update On 2017-05-18 08:26:00 IST
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டி.டி.வி.தினகரன் ஜாமீன் கேட்டு டெல்லி தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருக்கிறார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
புதுடெல்லி :

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் அவர்கள் டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான நீதிமன்ற காவலை வருகிற 29-ந் தேதி வரை நீடித்து கடந்த திங்கட்கிழமை நீதிபதி பூனம் சவுத்திரி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தினகரன் சார்பில் ஜாமீன் கோரி தனிக்கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. தினகரன் சார்பில் வக்கீல்கள் நவீன் மல்கோத்ரா, ஜெக்தீப் சர்மா ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டெல்லி போலீசார் பதிவு செய்துள்ள இந்த வழக்கு தொடர்பான சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தினகரனுக்கு எந்தவகையிலும் தொடர்பு கிடையாது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் என்ற நபர், அனைவரும் அறிந்த பிரபலமான மோசடி பேர்வழி. ஏற்கனவே அவர் மீது பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோன்ற ஒரு நபர் அளித்த வாக்குமூலத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டு தினகரனை கைது செய்திருப்பது தவறானதாகும்.

இந்த வழக்கு தொடர்பாக தினகரனுக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியதும் அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான அத்தனை விளக்கங்களையும் அவர் டெல்லி போலீசுக்கு அளித்து இருக்கிறார். இனி அவரை நீதிமன்ற காவலிலோ அல்லது போலீஸ் காவலிலோ வைத்து விசாரிக்க எந்த முகாந்திரமும் கிடையாது.

தினகரனின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் போலீசார் ஏற்கனவே சோதனைகள் மேற்கொண்டு உள்ளனர் எனவே அவரால் கலைக்கக் கூடிய எந்த ஆதாரமும், சாட்சியமும் தற்போது இல்லை. மேலும் சிறையில் அவருடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தினகரனை நீதிமன்ற காவலில் இருந்து விடுவித்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு மீது இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.

இதேபோல் மல்லிகார்ஜூன் சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரிகளை சி.பி.ஐ. ஆய்வு மையத்தில் ஆய்வு செய்ய அனுமதி கோரி டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ள மனு இன்று (வியாழக்கிழமை) நீதிபதி பூனம் சவுத்திரி முன்பு விசாரணைக்கு வருகிறது.

Similar News