செய்திகள்

ஒரே கட்டமாக தேர்தல்: உத்தரகாண்டில் நாளை வாக்குப்பதிவு

Published On 2017-02-14 10:43 GMT   |   Update On 2017-02-14 10:43 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 69 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் 637 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 75 லட்சத்து 13 ஆயிரம் பேர் வாக்களிக்கிறார்கள்.
டேராடூன்:

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநிலங்களுடன் சேர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கும் இப்போது சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இதில், பஞ்சாப், கோவா மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது. உத்தரபிரதேசத்தில் பல கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. ஒரு தொகுதியின் வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்து விட்டதை அடுத்து அந்த தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.

மற்ற 69 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் 637 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 75 லட்சத்து 13 ஆயிரம் பேர் வாக்களிக்கிறார்கள்.

தற்போது உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. தேர்தல் பற்றி முதல்-மந்திரி ஹரீஸ் ராவத் கூறும்போது, குறைந்த பட்சம் 45 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று கூறினார். பாரதிய ஜனதா மாநில தலைவர் வினய் கோயல் கூறும் போது, பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 5 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது.

அப்போது கிடைத்த வாக்குப்படி 63 தொகுதிகளில் நாங்கள் முன்னணியில் இருந்தோம். இப்போது குறைந்தபட்சம் 50 இடங்களையாவது பிடிப்போம் என்று கூறினார்.

கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 32 இடங்களையும், பாரதிய ஜனதா 31 இடங்களையும் பிடித்தன. பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் 7 இடங்களை பிடித்தன.

Similar News