செய்திகள்

குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக ‘கருப்பு பூனைகள்’

Published On 2017-01-26 09:25 GMT   |   Update On 2017-01-26 09:25 GMT
புதுடெல்லி ராஜபாதையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் முதன் முறையாக கருப்பு பூனைப் படைப்பிரிவினர் அணிவகுத்துச் சென்றனர்.
புதுடெல்லி:

நாட்டின் 68வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுடெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் 
அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

இம்முறை முப்படை வீரர்களின் அணிவகுப்புடன், முதன் முறையாக தேசிய பாதுகாப்பு படையின் கருப்பு பூனைப்படை அணிவகுப்பு இடம்பெற்றது. 140 வீரர்கள் தங்களது கைகளில் எம்பி-5 சிறப்பு ரக ரைபிள்களுடன் மிடுக்காக அணிவகுத்தனர்.

மேலும், தீவிரவாதிகளுடன் மோதும்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வாகனத்தையும் குடியரசு தின அணிவகுப்பில் அனைவரும் பிரமிக்கும் வகையில் கொண்டு சென்றனர். இவர்களின் இந்த முதல் அணிவகுப்பு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் கரகோஷத்தை எழுப்பியது.

நாட்டின் எந்தப் பகுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் தான் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News