செய்திகள்

ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத விரக்தியில் விவசாயி தற்கொலை

Published On 2016-11-15 08:48 IST   |   Update On 2016-11-15 08:48:00 IST
சொந்த ஊர் திரும்ப முடியாமல் தமிழகத்தில் தவிக்கும் மகன்களுக்கு அனுப்புவதற்காக, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத விரக்தியில் விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராய்கார்:

தமிழகத்தில் உள்ள பஞ்சாலை ஒன்றில் தொழிலாளிகளாக வேலை பார்ப்பவர்கள் சுனில் (வயது 22), அனில் (20). அண்ணன், தம்பிகளான இருவரும் சத்தீஸ்கார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 8-ந்தேதி மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், சுனில் மற்றும் அனிலுக்கு ஊதியம் கொடுக்காமல் ஒப்பந்தகாரர் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இதனால் சகோதரர்கள், சொந்த ஊர் திரும்ப கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டனர். இதனையடுத்து சத்தீஸ்கார் மாநிலம் மகாராஜ்புரில் உள்ள தங்கள் தந்தை ரவி பிரதானுக்கு (45) போன் செய்து, தங்களுக்கு பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ரவி பிரதான் விவசாயம் பார்த்து வந்தார்.

இதனையடுத்து வீட்டில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக அருகில் உள்ள வங்கிக்கு ரவி பிரதான் சென்றார். அங்கு நீண்ட வரிசையில் தொடர்ந்து 2 நாட்களாக காத்திருந்தும் அவரால் ரூபாய் நோட்டை மாற்ற முடியவில்லை.

சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் மகன்களுக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றி பணம் அனுப்ப முடியாத விரக்தியில் விவசாயி ரவி பிரதான், தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சத்தீஸ்கார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News